Monday 5 December 2011

வாடிய பயிர்

காரு, வண்டி போற பெரிய ரோட்டுலருந்து மூணுகல்லுத் தூரந்தேன்னாலும், நடந்தே போறதுக்கு அரைமணியாது ஆகிப்போகும் !
தார் ரோடு போட்டிருக்கு........................
எப்பவாது வர்ற பஸ்ஸுக்குன்னு போட்ட ரோடுன்னாலும், சோளமும்,கம்புந்தேன் எப்பவுமே காஞ்சுகிட்டு கெடக்கும் !

வழி நெடுக்க புளியமரம் பகல்லயே பயமுறுத்தும்!

ஓடைப்பாலம் தாண்டிப்போனா ஆடுகல்லாம் மேஞ்சுட்டுருக்கும் !

ஊரு நொழஞ்சதுமே, பிரசிடெண்ட் அய்யா தொறந்துவச்ச எம்.ஜி.ஆர். செல வரவேக்கும் !

ஊர் பொது களத்துக்கு எதுத்தா போல டீக்கடை ஒன்னு இருக்கும் !

யாரு வூட்டுக்கு விருந்தாளா போனாலும் டீக்கடை அக்காதேன், மொதல்ல செளக்கியத்த கேட்டுப்புட்டு டீத்தண்ணியும் போட்டுத்தரும் !

வாத்தியாரு வூட்டுக்கு பின்னாலயே அஞ்சாப்பு வரையுமுள்ள பள்ளிக்கோடம் ஒன்னுருக்கும். கடைசி பெல்லு அடிக்கிற வரைக்கும் பயபுள்ளைக "குய்யோ மொறையோன்னு" கத்திகிட்டு கெடக்கும் !

தெருவுக்குள்ள நொழையும் போது, வெத்தலைய இடிச்சுக்கிட்டெ கெழவி ரெண்டு , நெத்திமேல கைய வச்சு அடையாளம்தேன் பாக்கும். அடையாளந் தெரியலேன்னா ஆரு சாமி நிய்யின்னு கேட்டு தெரிஞ்சுட்டுத்தேன் தெருவுக்கு உள்ளயே வுடும்!

தெருவுக்கு ஏழெட்டு வூடுகதானிருக்கும், வூட்ட வுட வாசல்ல கோலந்தேன் பெருசாருக்கும் !ஓட்டு வூட்டுக்குள்ள சூரியென் வெளிச்சம் பட்டா, பொக போல தூசி பறக்கும் !

அடுப்பு மேட்டு மேல சாணி போட்டு மொழுகீருக்கும், பாத்திரங்க அத்தனையும் அது இஷ்டத்துக்கு நெளிஞ்சிருக்கும், பழைய சோத்துச் சட்டி மேல உறிச்ச வெங்காயம் நாலு கெடக்கும் !

ஒழுகுற மூக்கத் தொடைக்க புள்ளைக கைய எடுத்தா, அது வரைக்கும் பிடிச்சுருந்த டவுசரு கழண்டு விழும் !

திருவிழா, திருவிழாவுக்குத்தேன் பூசை நடக்கும், ஊருக்கு மத்திலருக்கும் காளியாத்தா கோயிலுக்கும் !

சாவடி திண்ணையில ஆடுபுலியாட்டம் நடக்கும், வீண் சண்ட போடுறதுக்கும், வேடிக்க பாக்குரதுக்கும் பெரிய கூட்டமே அங்க நிக்கும் !

சக்களத்திச் சண்ட போல சாதிச் சண்டயும் நெறயா நடக்கும் !

ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசயா, நல்லாத்தேன் போயிகிட்டுருந்துச்சு..............

கெணத்துல தண்ணி வத்தி, வெவசாயம் நின்னு போயி , ஊரக் காலி பண்ணி சனமெல்லாம் மில்லு வேலைக்குன்னு வெளியூரு போற வரைக்கும் !

இன்னைக்கு சாவடித்திண்ணையும், வாசல்ல கோலமும், மூக்கொழுகுற புள்ளைகளும் இல்லாம........................

காஞ்ச பயிரா என் ஊரும் வாடிக்கெடக்குது !

-ஜீவன்-

    6 comments:

    1. வட்டார மொழியில் அழகிய பதிவு... வாழ்த்துக்கள் மச்சி! தொடருங்கள்... கடைசியா, இன்றைய நிலையை இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்ன்றது என் தாழ்மையான கருத்து.

      ReplyDelete
    2. இன்றைய நிலையை இன்னுமொரு பதிவாக விளக்கமாய் எழுதவே இதை சுருக்கிக்கொண்டேன். நன்றி மச்சி உன் கருத்து என் அடுத்த பதிவில் பிரதிபலிக்கும்.

      ReplyDelete
    3. super machi ....... ( aduttha pathivu .... innum suvarasiyama irukka vaaltthukkal )

      ReplyDelete
    4. நன்றி நண்பரே

      ReplyDelete
    5. சார்ட் அண்ட் ஸ்வீட். எக்சலண்ட். கிராமத்தின் இயல்பை அச்சு அசலாக கண்முன் நிழலாட வைத்ததற்கு! என்னைப் பொறுத்த வரை இது கதை அல்ல. பேச்சு தமிழில் ஓர் கிராமிய கவிதை!

      சூப்பர். இதே அளவில், அழகில் மென்மேலும் வரைக!

      ReplyDelete
    6. நன்றி நண்பரே

      ReplyDelete