Sunday 4 November 2012

பயணம்...

தவிர்க்க முடியாதவைகள் ஆகிவிடுகின்றன சில பயணங்கள்...
அன்றிரவும் அதேமாதிரியான அவசர பயணம் .....

டிக்கெட் தேடடுதலுக்கு  IRCTC , நுழையவே முடியவில்லை.
டிக்கெட் ஏஜன்ட் எவரும் சிக்கவில்லை, ஆம்னி பஸ்ஸிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டிருந்தது....


அன்ரிசர்வ்டு பயணம், அசெளகரியம் ஆதலால் , சாமர்த்தியமாய்... வெயிட்டிங்லிஸ்ட் 615 ஆக இருந்தாலும் ரிசர்வேஷன் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ரயிலேறி,  TTR யிடம் ரயில்வேயில் பணிபுரியும் உறவினர் ஒருவர் பெயர் சொல்லி, எப்படியாவது ஒரு சீட் கொடுக்கும்படி மன்றாடத் தொடங்கினேன்.

அப்போது அறிமுகமானாள்.......
 அதே TTR யிடம் தனக்கும் சீட் கேட்டு நின்ற அவள்.....
 முதலில் சீட் எனக்கா? அவளுக்கா? என்கிற போட்டியையும் தாண்டி வசீகரித்தாள்.


நேர்வகிடும்...
திருத்திய புருவமும்...
நீள நாசியும்...
கோவை இதழும்...
இரட்டை நாடியும்...
சங்கு கழுத்தும்...

க்கும்.....க்...க்கும்....ம்..ம்ம்ம்
(சரி...ச ரி..அதேதான் )

என்ன இருந்து என்ன , இப்போதைக்கு உட்கார்ந்துகொள்ளவாயும் சீட் வேணுமே...... மன்றாடல் நிறுத்தவில்லை நானும்.

மனமிறங்கிய TTR  " ஒரு பெர்த் தான் இருக்கு, ரெண்டு பேரும் அட்ஜஸ் உட்கார்ந்துக்கோங்க" என்றார்.

இரண்டு லட்டு கிடைத்த சந்தோஷம், குதூகலத்தில் மனதிற்குள்ளேயே குதித்துக் கொண்டேன்.....

அவளுக்கு அந்தமாதிரி சந்தோஷமிருந்ததாய் தெரியவில்லை.
நானோ அவளோ அருகிருந்தும் சம்பிரதாயத்திற்குக் கூட புன்னகைத்துக் கொள்ளவில்லை,
விரக்தியில் வழக்கம் போல ஆன்ட்ராய்டுக்குள் முகம் புதைத்தேன் ...

ஒரிரு மணி கடந்திருக்கும்....
என்னை அவள் கவனிப்பது போன்ற உள்ளுணர்வு எனக்கு....

சட்டென நிமிர்ந்தேன்.....
 ஆம் அவள் பார்வை என்னில் நிலைத்திருந்தது !

"அப்படி ஒரு ஏக்கப் பார்வை"

இருக்கையிலிருந்து சட்டென எழுந்தேன்..........

சற்றும் தாமதிக்காமல் காலை நீட்டிப் படுத்துத் தூங்கிப்போனாள் !

- ஜீவன் -

Wednesday 17 October 2012

காகிதவாசம் ...

மழை நாளில் கப்பல் செய்ய காகிதம் கிழித்தவன் . . .

மளிகை கடை அண்ணாச்சி பொட்டணத்தில் வாசிக்கத் தொடங்கி. . .

காமிக்ஸ், பூந்தளிர்களின் ரசிகனாகி . . .

பாடப் புத்தகங்களால் துவம்சம் செய்யப்பட்டு . . .

டீக்கடை தினத்தந்தியை பள்ளியில் பிதற்றி . . .

மொழி பழக வழி தேடி, டிக்ஸ்னரியோடு ஹிந்துவில் மூழ்கி . . .

வார இதழ்களின் சினிமா செய்திகளில் லயித்து . . .

பாட்டுப் புத்தகமும், பலான புத்தகமுமாய் சிதைந்து . . .

கவிதை புத்தகத்தில் கால் தவறி விழுந்து . . .

நிதானித்து எழுவதற்காய் கம்யூனிசம் கற்று . . .

புரட்சி கசக்க கம்யூனிசம் துறந்து. . .

தலைக்கேறிய போதை இலக்கியம் கேட்க . . .

புரியாவிடினும் புதினம் குழப்பி . . .

முழுதாய் வாசிக்கும் பொறுமை  தொலைத்து. . .

கடைசிப்பக்கம் முதலில் பருகி . . .

நுனிப்புல்லாய் புத்தகம் மேய்கிறேன் . . .  இப்போதெல்லாம்  !

அறிவு முதிர்ச்சியோ ? அறிவீனமோ ?    இதுவே நான்...!

வேண்டுவதிதுவே. . .

புத்தகங்களாலேயே கட்டுங்கள் என் கல்லறையை !
எனை அரிக்கப்போகும் கரையான்களுக்கும்  பிடிக்கும் காகிதவாசம் !

- ஜீவன் -

Saturday 26 May 2012

யாதுமானவன்....

ஆடைகள் அரைகுறையாய் !

அவன் வார்த்தைகளுக்கோ அதுவுமில்லை !

பெரும் மூட்டைக்குள் கற்கள் பொறுக்கி வைத்திருக்கிறான், அருகில் செல்வோருக்கு ஆளுக்கொன்றாய் நீட்டுகிறான் !

அழுக்கேரி சடை பிடித்த தலைமுடியே கிரீடம் !

எதோ சாதித்த பெருமிதம் எப்போதும் அவன் முகத்தில் !




நிசப்தம் சாத்தியமில்லை என்றான் !

இரைச்சல் மிகுதியென்றான் !

கூடுகளாய் குப்பை சேர்ப்பதாய் பறவைகளைப் பழித்தான் !

அம்புலி வருமுன் ஓடி மறைந்துகொள் என்று சூரியன் காதில் கிசுகிசுத்தான் !

உரக்க கத்தி.....

புதைகுழிக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே.........

வாழ்க்கை உங்களை விழுங்கிக் கொண்டிருப்பதை அறிவீரோ ? என்றான் !

எத்தனை முறை வென்றாலும் கடைசியில் தோற்றுப்போவாய் மரணத்திடம் என்றான் !

சன்னமான குரலில் .............

நிர்வானம் உடலுக்கில்லை என்றான் !

எவரும் திருப்தி அடையா தாரம் பொருளா"தாரம்" என்றான் !

அழுக்கு தாடிக்குள் விரல் சொருகி , வரட்..... வரட்டென சொரிந்தவன் .........

அலறியபடி மீண்டும் சொன்னான்..........

நிசப்தம் சாத்தியமில்லை , இரைச்சல் அதிகம்..........


- ஜீவன் -