Tuesday 1 November 2011

தேவதை


 வெள்ளை வானவில்லாய் வரிசையாய் வளைந்து பறக்கும்       புறாக்கூட்டம் !

  தூக்கம் விழித்த புத்துணர்வுடன் புதுப்பூக்கள் ! '
                           புறப்படத் தயாராய் சூரியன் வரவுக்கு காத்திருக்கும் வைர நிலா !
 பூமி முழுதும் அடைமழையால் நனைத்துவிட்ட திருப்தியில்                                                             தூரிக்கொண்டிருக்கும் மழை!
அது ஒரு அழகிய  மழைக்கால இளங்காலை !
                 பல்லக்காய் என் தாய்வயிற்றில் இளவரசி எனைச் சுமந்து!
புற்களில் இருந்து விழும் பனித்துளியாய் நான் பூமியில் ............!
                                                    பிறந்தேன்........!

பிறந்த குழந்தைகள் அழாமல் இருந்தால்தானே ஆபத்து,.............. அழுதேன் !

ஆர்பரித்தனர் என் பெற்றோரும் உறவினர்களும் !

எனக்கு சரியாய் ஞாபகமில்லை எதற்காக  அப்போது அழுதேனென்று ,!

காலண்டர் சில மாதங்களை கிழித்துவிட்டிருந்தது,

நான் தவழ வேண்டியவள்...........!
                                                                     தவழ்ந்தேன்...!

அப்போதும் ஆர்பரித்தனர் என் பெற்றோர் ,                                                                                                                                                  தவழுவது தற்காலிகமென நினைத்து !

இப்போது காலண்டரே மாற்றப்ப்பட்டிருந்தது !

நான் நடக்க வேண்டியவள்......!

                               எழுந்தேன் கடலலை போல் !

கடலலை நிலைத்து நிற்பதில்லை.....!  விழுந்தேன் !

மருத்துவர்கள் என் கைகள் தவழுவதற்கு தகுதியானவை என சான்றிதள் கொடுத்தனர்.

இப்போது ஆர்ப்பரிக்க இயலாது துடித்தனர் என் பெற்றோர்,

கடலில் விழுந்த நிலா பிம்பமென கலங்கிவிட்டிருந்தது என் குடும்பம்.

 பள்ளிப் பருவம் ,
                  பள்ளியில் சேர்ந்தேன்...................
            என்னையும், என் புத்தகப் பையையும் சேர்த்தே சுமந்தனர் என் பெற்றோர்.
             பள்ளியின் விளையாட்டு மைதானம் எனக்கு வேற்று கிரகம்.
நான் பள்ளித் தோழிகளிடம் கேட்டேன் " தவழ்ந்து விளையாடும் விளையாட்டு ஒன்று கூட உங்களுக்கு தெரியாதா என்று"
அன்று முதல் என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொண்டனர்...."நடுவராக"

             என்னை கவலை இல்லாமல் செய்வதற்காகவே கவலைப் பட்டுக் கொண்டிருந்தது என் குடும்பம்.

             எனக்கு கைக்குட்டை வேண்டுமென்றால் துணிக்கடையையும்,
முகம் பார்க்க கண்ணாடி வேண்டுமென்றால் நிலவையும்,விளையாட வேண்டுமென்றால் பூங்காவையும், வீட்டிலேயே கொண்டு வந்து கொடுத்து என் ஊனத்தை அங்கீகரித்தனர்.

                யார் இந்த பெளர்ணமியை கோணலாய் செய்தது ? கடவுள் என் வாழ்க்கை குறிப்பை எழுதிக் கொண்டிருக்கும் போது, எழுதுகோலும் உடைந்து ஊனமானதோ ?
                ஆசை இல்லாத மனிதன் அரை மனிதனாம், எனக்கு ஆசை இருந்தும் அரை மனுஷி !
                எனக்கும் ஆசைகளுண்டு நான் வாங்கிய செருப்பு ,நான் நடந்தே அறுந்து போவதற்கு!
                என்ன செய்வது பெரும்பாலும் ஆசைகள் வருவது இல்லாததற்கும் இயலாததற்கும் தானே ....

என் பெற்றோர் எனக்கு சக்கர நாற்காலி வாங்கினர்.........
                                     என்னை விட என் கைகளுக்கு  அதிக மகிழ்ச்சி , இனிமேல் என் பாரத்தை முழுவதும் அவையே சுமக்க வேண்டியதில்லை.

          தோட்டம் நிறைய பூக்கள், எந்த பூக்களும் என்னை போல் அன்று பூத்திருக்கவில்லை. ஏனெனில் அது நான் பூப்பெய்தி இருந்த காலை. நான் பெரியவளானதாய் சொன்னார்கள், உண்மையில் நான் கூனிக் குறுகி சிறியவளாய் போனேன். சந்தோசமும், துக்கமும்  விரக்தியான சிரிப்பாய் என் தாய் முகத்தில்.
                            நான் யுவதியாய், எனக்கு கால்களாய் நிறைய தோழிகள், ஆனால் அவர்களுக்கும் கால்கட்டுப்போடும் வயதல்லவா? ஒவ்வொருவராய் பிரிந்தனர்.

                   எனக்கு அழுகை வருகிறது. தனிமை என் தலையணை, தனிமை ஒரு நூலகம், எதார்த்தங்களை விளக்கிச் சொல்லிக் க்கொடுத்தது தனிமை.

                         கடல் அலை விடுத்து ஆழ்கடல் மெளனம் ரசிக்கப் பழகி விட்டேன்.

திருமண வயது ,
                                            மாப்பிள்ளை பார்க்க தகுதி குறைச்சலாம், மாப்பிள்ளைகள்  என்னை பார்க்கிறார்கள், இல்லை, இல்லை, விலை பேசுகிறார்கள்.


                             ராமன் வேண்டாம் ராவணனாவது கிடைப்பானா என்ற ஏக்கத்தில் என் குடும்பத்தாரும் குறைந்து கொண்டிருக்கிறார்கள், விடியற்காலை விண்மீண்களைப் போல!


                            இப்பொழுதும் நம்பிக்கையாய் இருக்கிறேன், ஊன்றுகோலாய் தன்னையே கொடுக்கும் ஒருவன் வருவானென்று..........




             "இந்த பதிவை மாற்றுத்திறனாளி சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்"




ஜீவன்