Monday 31 October 2011

கடுதாசி

                "முதல் முயற்சியாதலால் பிழை பொறுக்க வேண்டுகிறேன்"

அன்புள்ள நண்பர்களே !
                       இது கடிதம் பற்றிய கடிதம்.  கடிதத்தின் மரபு மாற்றுவதில் எனக்கு விருப்பமில்லை,  அதனால் கேட்டே விடுகிறேன்,
                 
                     "நான் இங்கு நலம், அங்கு நீங்களும் உங்கள் குடும்பமும் நலமா? "

                      கடிதங்கள் முன்பெல்லாம் காரணங்களையும், காரியங்களையும் மட்டுமே சுமந்து கொண்டு சென்றன.
                     பெரும்பாலும் எழுதுபவரின் சுக துக்கங்களைச் சொல்லவோ, படிப்பவரின் சுக துக்கங்களை விசாரிக்கவோ, எழுதப்பட்ட கடிதங்களில், நான் நலம், நீ நலமா?  என்று கேட்கிற சம்பிரதாயம் ஏன், எப்படி வந்ததென புலப்படவே இல்லை !

                      நாம் அஞ்சலுக்கு அஞ்சலி செய்து பல காலம் போய்விட்டது, கடிதங்கள் கூரியராக டாகுமென்ட்டுகளை சுமந்துகொண்டிருக்கிறது.
                 
                    அஞ்சல் அட்டையின் விலை இப்போது எவ்வளவு என சத்தியமாய் தெரியவில்லை!

                   நமது அடுத்த தலைமுறைக்கு அஞ்சல் நிலையம் வரலாற்றுப் பாடமானாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை!

                
                  தபால்தலைகள் சேகரிப்பவர்கள் கூட அவற்றை நினைவுச் சின்னமாக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

                  யாருமே பயன்படுத்தவில்லை எனினும் சில மாதங்களுக்கு ஒரு முறை, எவர் தலையையாவது தபால் தலையாக வெளியிட்டு விடுகிறது அரசு.
                   
                 நினைத்த நொடியில் எவரையும் தொடர்புகொள்ள முடியும் எனினும், நாம் கடைபிடிக்கிற முறைகளில் உயிர்ப்பு குறைந்திருப்பதுவே உண்மை.

                  முன்பு என் வீட்டிற்கு வந்த கடிதங்களை சேமிப்பதற்காகவே ஜன்னலில் தொங்கிய சைக்கிள் சக்கர கம்பியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை!
                
                 கடிதம் போல் பரிமாரிக்க் கொண்ட வார்தைகள் அனைத்தையும் பத்திரப்படுத்த இந்த தொலைபேசிக்குத் தெரியவில்லை!
   
                  செளகர்யமாய் இல்லையென நாம் கைவிட்ட விஷயங்கள் , மனதிற்கு நெருக்கமானவையாய் ஒரு காலத்தில் இருந்தவையே.
                இந்த கடிதம் உஙகளுக்கு வந்த பழைய கடிதங்களின் நகல்.

படித்தவுடன் பதில் கடிதம் எழுதவும்.

தோழமையுடன்,

ஜீவன்.