Sunday 4 November 2012

பயணம்...

தவிர்க்க முடியாதவைகள் ஆகிவிடுகின்றன சில பயணங்கள்...
அன்றிரவும் அதேமாதிரியான அவசர பயணம் .....

டிக்கெட் தேடடுதலுக்கு  IRCTC , நுழையவே முடியவில்லை.
டிக்கெட் ஏஜன்ட் எவரும் சிக்கவில்லை, ஆம்னி பஸ்ஸிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டிருந்தது....


அன்ரிசர்வ்டு பயணம், அசெளகரியம் ஆதலால் , சாமர்த்தியமாய்... வெயிட்டிங்லிஸ்ட் 615 ஆக இருந்தாலும் ரிசர்வேஷன் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ரயிலேறி,  TTR யிடம் ரயில்வேயில் பணிபுரியும் உறவினர் ஒருவர் பெயர் சொல்லி, எப்படியாவது ஒரு சீட் கொடுக்கும்படி மன்றாடத் தொடங்கினேன்.

அப்போது அறிமுகமானாள்.......
 அதே TTR யிடம் தனக்கும் சீட் கேட்டு நின்ற அவள்.....
 முதலில் சீட் எனக்கா? அவளுக்கா? என்கிற போட்டியையும் தாண்டி வசீகரித்தாள்.


நேர்வகிடும்...
திருத்திய புருவமும்...
நீள நாசியும்...
கோவை இதழும்...
இரட்டை நாடியும்...
சங்கு கழுத்தும்...

க்கும்.....க்...க்கும்....ம்..ம்ம்ம்
(சரி...ச ரி..அதேதான் )

என்ன இருந்து என்ன , இப்போதைக்கு உட்கார்ந்துகொள்ளவாயும் சீட் வேணுமே...... மன்றாடல் நிறுத்தவில்லை நானும்.

மனமிறங்கிய TTR  " ஒரு பெர்த் தான் இருக்கு, ரெண்டு பேரும் அட்ஜஸ் உட்கார்ந்துக்கோங்க" என்றார்.

இரண்டு லட்டு கிடைத்த சந்தோஷம், குதூகலத்தில் மனதிற்குள்ளேயே குதித்துக் கொண்டேன்.....

அவளுக்கு அந்தமாதிரி சந்தோஷமிருந்ததாய் தெரியவில்லை.
நானோ அவளோ அருகிருந்தும் சம்பிரதாயத்திற்குக் கூட புன்னகைத்துக் கொள்ளவில்லை,
விரக்தியில் வழக்கம் போல ஆன்ட்ராய்டுக்குள் முகம் புதைத்தேன் ...

ஒரிரு மணி கடந்திருக்கும்....
என்னை அவள் கவனிப்பது போன்ற உள்ளுணர்வு எனக்கு....

சட்டென நிமிர்ந்தேன்.....
 ஆம் அவள் பார்வை என்னில் நிலைத்திருந்தது !

"அப்படி ஒரு ஏக்கப் பார்வை"

இருக்கையிலிருந்து சட்டென எழுந்தேன்..........

சற்றும் தாமதிக்காமல் காலை நீட்டிப் படுத்துத் தூங்கிப்போனாள் !

- ஜீவன் -