Thursday 15 December 2011

எ.கொ.சா.இ

சின்ன வயசுல , பிறந்தநாள் பரிசா அப்பா வாங்கிக் கொடுத்த வீடியோ கேம் ரொம்பப் பிடிச்சுப் போயி ,
ஆறு நாள் தொடர்ந்து விளையாடிட்டு அதுக்கப்புறம் அத தொடவே இல்ல !

கொஞ்சம் பெரியவனா ஆனதுமே............. ,
எல்லாருந்தான் சைக்கிள் ஓட்டுராய்ங்கன்னு ,
ஆசையா சைக்கிள் பழகி ஆறு மாசம் சைக்கிளே கதின்னு கெடந்ததுல, சைக்கிள் டயர் போலயே என் சைக்கிள் ஆசையும் தேய்ஞ்சு போச்சு!

படிக்கிற வயசுல, சரியாப் படிப்பு வரலைனாலும், ஒரே வகுப்புல , ஒரு வருஷம் முழுசா படிக்க முடியாம, டீச்சர் சரியா சொல்லித்தரலைன்னு அப்பாட்டச் சொல்லி வகுப்பு பிரிவையும் அடிக்கடி மாத்தீருவேன் !

பத்தாவது வரைக்கும் படிச்சதுக்கே பள்ளிக்கூடம் சலிச்சுப் போயி, கேட்டரிங் காலேஜ்ல போய் சேர்ந்துட்டேன் !
ரெண்டே செமஸ்டர்தான்.......  கேட்டரிங்குக்கு டாட்டா சொல்லீட்டேன் !

கம்ப்யூட்டர் , கர்னாடக சங்கீதம், ஸ்போக்கன் இங்கிலீஸ்னு  எல்லா கிளாஸுக்கும் போனேன்........................ ,
பாதியிலேயே போர் அடிச்சு விட்டுட்டேன் !

நிறையா பொண்ணுங்கள சைட் அடிச்சு..................,
ஒவ்வொரு பொண்ணா, நாலு பொண்ணுங்கள லவ்வும் பண்ணிப் பாத்தேன்..................,
ம்ம்ம்ஹூம் சரியா செட் ஆகல !

சரி வேலைக்குப் போலாம்னு முடிவு பண்ணி  ................,
மெடிக்கல் ஷாப். சூப்பர் மார்க்கெட், பனியன் கம்பெனின்னு எல்லாத்துக்கும் போனேன் .......................  ,
எதுவுமே என் திறமைக்கு தகுந்ததா தெரியல !

இனி சொந்த வியாபாரம்தான் சரின்னு முடிவு பண்ணி..................,
அப்பாகிட்ட ஒரு லட்சம ரூபாய  அடம் பிடிச்சு வாங்கீட்டுப் போயி ஒரு பேன்ஸி ஸ்டோர் ஆரம்பிச்சேன்............,
வருமானம் திருப்தியா இல்ல !

இப்ப வேற ஏதாவது பெரிய பிஸினஸ் ஆரம்பிச்சுப் பாக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கும் போது............




எனக்கு கல்யாண வயச்சாச்சுன்னு அம்மா சொல்ராங்க ........!


- ஜீவன் -

Wednesday 7 December 2011

அன்றாவது..........



பனி இரவு.........

முன் நெற்றியில் சரியும் கற்றை முடி !

பிறை நெற்றியில்,  முழு நிலாப் பொட்டு !

தேனில் விழுந்த திராட்சை போல, பாதி மூழ்கிய காமக் கண்கள் !

பக்கம் வந்தால் குத்திக் கீறிடும், கத்தியாய் நாசி !

கன்னத்தில் காலூன்றி, காது மடல் கவ்வி, ரகசியம் பேசும் காதணி !

சிலம்பாய் இதழ்கள்  !

பரல்களாய் பற்கள்!
உன் கழுத்து உரசியே தங்கமாய் மாறிக்கிடக்கும் சங்கிலி !

முழு முதுகு மறைத்து, பிட்டம் தாண்டிக் குதிக்கும் கருப்பு அருவியாய் கூந்தல் !

சேலையில் அடங்கா அழகு ................. !

வெள்ளைக் கரும்பு கைகள் !

கருப்புச் சேலையின் முந்தானை செருகியே, சிவந்து கிடக்கும் மஞ்சள் இடை !

இணைப் பனை கால்கள் !

நாணம் வரையும் கால் பெரு விரல் !

சற்றே நீளமாய் அடுத்த விரல் !

தனி அறை............................

இத்தனை அழகுடன் கூட்டமாய் நீ !

போர் வீரனாய் தனியே நான் !

மெதுவாய் என் அருகில் வந்தாய்.........................

பிடறி மயிர் பற்றி..........................

ஆவேசமாய் எனை அணைத்த.................. அன்றாவது..................

என் ஆழ்ந்த கனவை கலைக்காமல் இருந்திருக்கலாம் , என் தாத்தாவின் 

இருமல் !

Monday 5 December 2011

வாடிய பயிர்

காரு, வண்டி போற பெரிய ரோட்டுலருந்து மூணுகல்லுத் தூரந்தேன்னாலும், நடந்தே போறதுக்கு அரைமணியாது ஆகிப்போகும் !
தார் ரோடு போட்டிருக்கு........................
எப்பவாது வர்ற பஸ்ஸுக்குன்னு போட்ட ரோடுன்னாலும், சோளமும்,கம்புந்தேன் எப்பவுமே காஞ்சுகிட்டு கெடக்கும் !

வழி நெடுக்க புளியமரம் பகல்லயே பயமுறுத்தும்!

ஓடைப்பாலம் தாண்டிப்போனா ஆடுகல்லாம் மேஞ்சுட்டுருக்கும் !

ஊரு நொழஞ்சதுமே, பிரசிடெண்ட் அய்யா தொறந்துவச்ச எம்.ஜி.ஆர். செல வரவேக்கும் !

ஊர் பொது களத்துக்கு எதுத்தா போல டீக்கடை ஒன்னு இருக்கும் !

யாரு வூட்டுக்கு விருந்தாளா போனாலும் டீக்கடை அக்காதேன், மொதல்ல செளக்கியத்த கேட்டுப்புட்டு டீத்தண்ணியும் போட்டுத்தரும் !

வாத்தியாரு வூட்டுக்கு பின்னாலயே அஞ்சாப்பு வரையுமுள்ள பள்ளிக்கோடம் ஒன்னுருக்கும். கடைசி பெல்லு அடிக்கிற வரைக்கும் பயபுள்ளைக "குய்யோ மொறையோன்னு" கத்திகிட்டு கெடக்கும் !

தெருவுக்குள்ள நொழையும் போது, வெத்தலைய இடிச்சுக்கிட்டெ கெழவி ரெண்டு , நெத்திமேல கைய வச்சு அடையாளம்தேன் பாக்கும். அடையாளந் தெரியலேன்னா ஆரு சாமி நிய்யின்னு கேட்டு தெரிஞ்சுட்டுத்தேன் தெருவுக்கு உள்ளயே வுடும்!

தெருவுக்கு ஏழெட்டு வூடுகதானிருக்கும், வூட்ட வுட வாசல்ல கோலந்தேன் பெருசாருக்கும் !ஓட்டு வூட்டுக்குள்ள சூரியென் வெளிச்சம் பட்டா, பொக போல தூசி பறக்கும் !

அடுப்பு மேட்டு மேல சாணி போட்டு மொழுகீருக்கும், பாத்திரங்க அத்தனையும் அது இஷ்டத்துக்கு நெளிஞ்சிருக்கும், பழைய சோத்துச் சட்டி மேல உறிச்ச வெங்காயம் நாலு கெடக்கும் !

ஒழுகுற மூக்கத் தொடைக்க புள்ளைக கைய எடுத்தா, அது வரைக்கும் பிடிச்சுருந்த டவுசரு கழண்டு விழும் !

திருவிழா, திருவிழாவுக்குத்தேன் பூசை நடக்கும், ஊருக்கு மத்திலருக்கும் காளியாத்தா கோயிலுக்கும் !

சாவடி திண்ணையில ஆடுபுலியாட்டம் நடக்கும், வீண் சண்ட போடுறதுக்கும், வேடிக்க பாக்குரதுக்கும் பெரிய கூட்டமே அங்க நிக்கும் !

சக்களத்திச் சண்ட போல சாதிச் சண்டயும் நெறயா நடக்கும் !

ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசயா, நல்லாத்தேன் போயிகிட்டுருந்துச்சு..............

கெணத்துல தண்ணி வத்தி, வெவசாயம் நின்னு போயி , ஊரக் காலி பண்ணி சனமெல்லாம் மில்லு வேலைக்குன்னு வெளியூரு போற வரைக்கும் !

இன்னைக்கு சாவடித்திண்ணையும், வாசல்ல கோலமும், மூக்கொழுகுற புள்ளைகளும் இல்லாம........................

காஞ்ச பயிரா என் ஊரும் வாடிக்கெடக்குது !

-ஜீவன்-

    Tuesday 1 November 2011

    தேவதை


     வெள்ளை வானவில்லாய் வரிசையாய் வளைந்து பறக்கும்       புறாக்கூட்டம் !

      தூக்கம் விழித்த புத்துணர்வுடன் புதுப்பூக்கள் ! '
                               புறப்படத் தயாராய் சூரியன் வரவுக்கு காத்திருக்கும் வைர நிலா !
     பூமி முழுதும் அடைமழையால் நனைத்துவிட்ட திருப்தியில்                                                             தூரிக்கொண்டிருக்கும் மழை!
    அது ஒரு அழகிய  மழைக்கால இளங்காலை !
                     பல்லக்காய் என் தாய்வயிற்றில் இளவரசி எனைச் சுமந்து!
    புற்களில் இருந்து விழும் பனித்துளியாய் நான் பூமியில் ............!
                                                        பிறந்தேன்........!

    பிறந்த குழந்தைகள் அழாமல் இருந்தால்தானே ஆபத்து,.............. அழுதேன் !

    ஆர்பரித்தனர் என் பெற்றோரும் உறவினர்களும் !

    எனக்கு சரியாய் ஞாபகமில்லை எதற்காக  அப்போது அழுதேனென்று ,!

    காலண்டர் சில மாதங்களை கிழித்துவிட்டிருந்தது,

    நான் தவழ வேண்டியவள்...........!
                                                                         தவழ்ந்தேன்...!

    அப்போதும் ஆர்பரித்தனர் என் பெற்றோர் ,                                                                                                                                                  தவழுவது தற்காலிகமென நினைத்து !

    இப்போது காலண்டரே மாற்றப்ப்பட்டிருந்தது !

    நான் நடக்க வேண்டியவள்......!

                                   எழுந்தேன் கடலலை போல் !

    கடலலை நிலைத்து நிற்பதில்லை.....!  விழுந்தேன் !

    மருத்துவர்கள் என் கைகள் தவழுவதற்கு தகுதியானவை என சான்றிதள் கொடுத்தனர்.

    இப்போது ஆர்ப்பரிக்க இயலாது துடித்தனர் என் பெற்றோர்,

    கடலில் விழுந்த நிலா பிம்பமென கலங்கிவிட்டிருந்தது என் குடும்பம்.

     பள்ளிப் பருவம் ,
                      பள்ளியில் சேர்ந்தேன்...................
                என்னையும், என் புத்தகப் பையையும் சேர்த்தே சுமந்தனர் என் பெற்றோர்.
                 பள்ளியின் விளையாட்டு மைதானம் எனக்கு வேற்று கிரகம்.
    நான் பள்ளித் தோழிகளிடம் கேட்டேன் " தவழ்ந்து விளையாடும் விளையாட்டு ஒன்று கூட உங்களுக்கு தெரியாதா என்று"
    அன்று முதல் என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொண்டனர்...."நடுவராக"

                 என்னை கவலை இல்லாமல் செய்வதற்காகவே கவலைப் பட்டுக் கொண்டிருந்தது என் குடும்பம்.

                 எனக்கு கைக்குட்டை வேண்டுமென்றால் துணிக்கடையையும்,
    முகம் பார்க்க கண்ணாடி வேண்டுமென்றால் நிலவையும்,விளையாட வேண்டுமென்றால் பூங்காவையும், வீட்டிலேயே கொண்டு வந்து கொடுத்து என் ஊனத்தை அங்கீகரித்தனர்.

                    யார் இந்த பெளர்ணமியை கோணலாய் செய்தது ? கடவுள் என் வாழ்க்கை குறிப்பை எழுதிக் கொண்டிருக்கும் போது, எழுதுகோலும் உடைந்து ஊனமானதோ ?
                    ஆசை இல்லாத மனிதன் அரை மனிதனாம், எனக்கு ஆசை இருந்தும் அரை மனுஷி !
                    எனக்கும் ஆசைகளுண்டு நான் வாங்கிய செருப்பு ,நான் நடந்தே அறுந்து போவதற்கு!
                    என்ன செய்வது பெரும்பாலும் ஆசைகள் வருவது இல்லாததற்கும் இயலாததற்கும் தானே ....

    என் பெற்றோர் எனக்கு சக்கர நாற்காலி வாங்கினர்.........
                                         என்னை விட என் கைகளுக்கு  அதிக மகிழ்ச்சி , இனிமேல் என் பாரத்தை முழுவதும் அவையே சுமக்க வேண்டியதில்லை.

              தோட்டம் நிறைய பூக்கள், எந்த பூக்களும் என்னை போல் அன்று பூத்திருக்கவில்லை. ஏனெனில் அது நான் பூப்பெய்தி இருந்த காலை. நான் பெரியவளானதாய் சொன்னார்கள், உண்மையில் நான் கூனிக் குறுகி சிறியவளாய் போனேன். சந்தோசமும், துக்கமும்  விரக்தியான சிரிப்பாய் என் தாய் முகத்தில்.
                                நான் யுவதியாய், எனக்கு கால்களாய் நிறைய தோழிகள், ஆனால் அவர்களுக்கும் கால்கட்டுப்போடும் வயதல்லவா? ஒவ்வொருவராய் பிரிந்தனர்.

                       எனக்கு அழுகை வருகிறது. தனிமை என் தலையணை, தனிமை ஒரு நூலகம், எதார்த்தங்களை விளக்கிச் சொல்லிக் க்கொடுத்தது தனிமை.

                             கடல் அலை விடுத்து ஆழ்கடல் மெளனம் ரசிக்கப் பழகி விட்டேன்.

    திருமண வயது ,
                                                மாப்பிள்ளை பார்க்க தகுதி குறைச்சலாம், மாப்பிள்ளைகள்  என்னை பார்க்கிறார்கள், இல்லை, இல்லை, விலை பேசுகிறார்கள்.


                                 ராமன் வேண்டாம் ராவணனாவது கிடைப்பானா என்ற ஏக்கத்தில் என் குடும்பத்தாரும் குறைந்து கொண்டிருக்கிறார்கள், விடியற்காலை விண்மீண்களைப் போல!


                                இப்பொழுதும் நம்பிக்கையாய் இருக்கிறேன், ஊன்றுகோலாய் தன்னையே கொடுக்கும் ஒருவன் வருவானென்று..........




                 "இந்த பதிவை மாற்றுத்திறனாளி சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்"




    ஜீவன்


    Monday 31 October 2011

    கடுதாசி

                    "முதல் முயற்சியாதலால் பிழை பொறுக்க வேண்டுகிறேன்"

    அன்புள்ள நண்பர்களே !
                           இது கடிதம் பற்றிய கடிதம்.  கடிதத்தின் மரபு மாற்றுவதில் எனக்கு விருப்பமில்லை,  அதனால் கேட்டே விடுகிறேன்,
                     
                         "நான் இங்கு நலம், அங்கு நீங்களும் உங்கள் குடும்பமும் நலமா? "

                          கடிதங்கள் முன்பெல்லாம் காரணங்களையும், காரியங்களையும் மட்டுமே சுமந்து கொண்டு சென்றன.
                         பெரும்பாலும் எழுதுபவரின் சுக துக்கங்களைச் சொல்லவோ, படிப்பவரின் சுக துக்கங்களை விசாரிக்கவோ, எழுதப்பட்ட கடிதங்களில், நான் நலம், நீ நலமா?  என்று கேட்கிற சம்பிரதாயம் ஏன், எப்படி வந்ததென புலப்படவே இல்லை !

                          நாம் அஞ்சலுக்கு அஞ்சலி செய்து பல காலம் போய்விட்டது, கடிதங்கள் கூரியராக டாகுமென்ட்டுகளை சுமந்துகொண்டிருக்கிறது.
                     
                        அஞ்சல் அட்டையின் விலை இப்போது எவ்வளவு என சத்தியமாய் தெரியவில்லை!

                       நமது அடுத்த தலைமுறைக்கு அஞ்சல் நிலையம் வரலாற்றுப் பாடமானாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை!

                    
                      தபால்தலைகள் சேகரிப்பவர்கள் கூட அவற்றை நினைவுச் சின்னமாக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

                      யாருமே பயன்படுத்தவில்லை எனினும் சில மாதங்களுக்கு ஒரு முறை, எவர் தலையையாவது தபால் தலையாக வெளியிட்டு விடுகிறது அரசு.
                       
                     நினைத்த நொடியில் எவரையும் தொடர்புகொள்ள முடியும் எனினும், நாம் கடைபிடிக்கிற முறைகளில் உயிர்ப்பு குறைந்திருப்பதுவே உண்மை.

                      முன்பு என் வீட்டிற்கு வந்த கடிதங்களை சேமிப்பதற்காகவே ஜன்னலில் தொங்கிய சைக்கிள் சக்கர கம்பியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை!
                    
                     கடிதம் போல் பரிமாரிக்க் கொண்ட வார்தைகள் அனைத்தையும் பத்திரப்படுத்த இந்த தொலைபேசிக்குத் தெரியவில்லை!
       
                      செளகர்யமாய் இல்லையென நாம் கைவிட்ட விஷயங்கள் , மனதிற்கு நெருக்கமானவையாய் ஒரு காலத்தில் இருந்தவையே.
                    இந்த கடிதம் உஙகளுக்கு வந்த பழைய கடிதங்களின் நகல்.

    படித்தவுடன் பதில் கடிதம் எழுதவும்.

    தோழமையுடன்,

    ஜீவன்.