Wednesday 17 October 2012

காகிதவாசம் ...

மழை நாளில் கப்பல் செய்ய காகிதம் கிழித்தவன் . . .

மளிகை கடை அண்ணாச்சி பொட்டணத்தில் வாசிக்கத் தொடங்கி. . .

காமிக்ஸ், பூந்தளிர்களின் ரசிகனாகி . . .

பாடப் புத்தகங்களால் துவம்சம் செய்யப்பட்டு . . .

டீக்கடை தினத்தந்தியை பள்ளியில் பிதற்றி . . .

மொழி பழக வழி தேடி, டிக்ஸ்னரியோடு ஹிந்துவில் மூழ்கி . . .

வார இதழ்களின் சினிமா செய்திகளில் லயித்து . . .

பாட்டுப் புத்தகமும், பலான புத்தகமுமாய் சிதைந்து . . .

கவிதை புத்தகத்தில் கால் தவறி விழுந்து . . .

நிதானித்து எழுவதற்காய் கம்யூனிசம் கற்று . . .

புரட்சி கசக்க கம்யூனிசம் துறந்து. . .

தலைக்கேறிய போதை இலக்கியம் கேட்க . . .

புரியாவிடினும் புதினம் குழப்பி . . .

முழுதாய் வாசிக்கும் பொறுமை  தொலைத்து. . .

கடைசிப்பக்கம் முதலில் பருகி . . .

நுனிப்புல்லாய் புத்தகம் மேய்கிறேன் . . .  இப்போதெல்லாம்  !

அறிவு முதிர்ச்சியோ ? அறிவீனமோ ?    இதுவே நான்...!

வேண்டுவதிதுவே. . .

புத்தகங்களாலேயே கட்டுங்கள் என் கல்லறையை !
எனை அரிக்கப்போகும் கரையான்களுக்கும்  பிடிக்கும் காகிதவாசம் !

- ஜீவன் -